இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்ற இந்திய அணியானது 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இதில் அதிகாட்சமாக ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில்க் துனில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும்வென்றது. மேலும் இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இலங்கை வீரர் துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குசால் மெண்டீஸுக்கு வழங்கினார். அதன்படி, டிரஸ்ஸிங் ரூமிலிருந்து டி-ஷர்ட்டுடன் வந்த விராட் கோலி , அதில் கையெழுத்திட்டு இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸுக்கு பரிசளித்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.