ஃபீல்டிங்கில் அசத்திய யுவராஜ் சிங்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நேற்று நவி மும்பையில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா மாஸ்டர்ஸ் அணி ஸ்டூவர்ட் பின்னி மற்றும் யூசுப் பதானின் அரைசதங்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 3 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 68 ரன்களையும், யூசுப் பதான் 3 பாவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களையும் குவித்து அணிக்கு தேவையான ஸ்கோரை கொண்டு வந்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் குமார் சங்கக்காரா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 51 ரன்களையும், ஜீவன் மெண்டிஸ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம், இந்தியா மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ஃபீல்டிங் திறமைக்காக அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதன்படி இர்ஃபான் பதான் வீசிய இன்னிங்ஸின் 8ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட லஹிரு திரிமானே அந்த பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தர். மேலும் அவர் அந்த பந்தை சரியாக அடித்ததன் காரணமாக நிச்சயம் சிக்ஸருக்கு சென்றதாக பார்க்கப்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த யுவராஜ் சிங் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான டைவை அடித்து அற்புதமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். இதனை கண்ட ரசிகர்கள் யுவராஜ் சிங் இன்னும் தனது இளமை கால ஃபீல்டிங் திறனை அப்படியே வைத்துள்ளதாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யுவராஜ் சிங் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.