இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ரியான் பராக்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து மிரட்டிய கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும், ரியன் பராக் 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், “இது ஒரு நம்பமுடியாத போட்டியாக இருந்தது. நாங்கள் அவருடன் 2 மாதங்கள் செலவிட்டோம், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்தோம். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதைச் செய்வது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. கடந்த ஆட்டத்திலிருந்து இதை மாற்றினோம்.
Also Read: LIVE Cricket Score
இதை எப்படி கொஞ்சம் முன்னதாகவே முடிக்க முடியும் என்ற நோக்கத்துடன் பேட்டிங் செய்தோம். நாங்கள் நிறைய பயிற்சி செய்தோம், இன்று அதை செயல்படுத்தினோம், அது எங்களுக்கு உதவியது. ஐபிஎல்லைப் பார்த்து நீங்கள் தினமும் கற்றுக்கொள்ளலாம். இந்த வெற்றியை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். இறுதியில் அது ஒருதலைப்பட்சமாக எங்கள் பக்கம் வந்தது, எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.