ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Sun, Apr 07 2024 12:12 IST
ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைக் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 148 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “இந்த பிட்ச் சிக்கலானதாக இருந்தது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது 190 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். நாங்கள் கடைசி நேரத்தில் 10 - 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம். அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். மேலும் அவர்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீசியது சாதகமாக மாறிவிட்டது. ஏனெனில் பனியின் தாக்கத்தில் பேட்டிங் செய்வது எளிதானது. 

விராட் கோலி கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடினார். கடைசி கட்டத்தில் விராட் கோலி, கேமரூன் க்ரீன் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரேனும் ஒருவர் ரன் குவித்து இருந்தால் நாங்கள் இன்னும் அதிக ஸ்கோரை சேர்த்து இருப்போம். எங்களால் முடிந்தவரை இந்த போட்டியில் ரன்களைச் சேர்க்க முயற்சி செய்தோம். ஆனால் இந்த மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது என்பது மிகப்பெரும் சிக்கலாக அமைந்தது. 

அதேபோல் எதிரணி பேட்டிங் செய்த போது அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்துவதையே நாங்கள் முதல் திட்டமாக வைத்திருந்தோம். இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்கூட்டியே விக்கெட்டுகளை இழந்ததால், நாங்கள் மேக்ஸ்வெல்லை பந்துவீச்சிற்கு அழைக்கவில்லை. மேலும் இப்போட்டியில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். எங்கள் தவறுகளிலிருந்து மீண்டு நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை