தொடர் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஸ்மிருதி மந்தனா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், ராக்வி பிஸ்ட் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஷிகா பாண்டே மற்றும் சரனி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் மெக் லெனிங் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஷஃபாலி வர்மாவுடன் இணைந்த ஜெஸ் ஜோனசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி வர்மா 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், ஜெஸ் ஜோனசன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15.3 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இப்போட்டியில் எல்லிஸ் பெர்ரி சிறப்பாக பேட்டிங் செய்து 145 ரன்கள் எடுக்க உதவினார். எனக்கு இன்னும் சிறப்பான தொடக்கம் கிடைத்திருக்கலாம். இருப்பினும் இந்த விக்கெட்டில் 145 ரன்களை எடுத்தது ஒரு நல்ல முயற்சி என்று நினைக்கிறேன். ஏனெனில் மைதானம் மிகவும் மெதுவாக இருந்தது. இங்கு நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடிய நிலையிலும், எங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
ராக்வி பிஸ்ட் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருந்தார். அவர் தனது இன்னிங்ஸை முடித்த விதம் அவருக்கு நல்லது. ரேணுகா சிங் இத்தொடர் முழுவது எங்களுக்கு அற்புதமாக இருந்துள்ளார். அடுத்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் ஓய்வு உள்ளது. நிச்சயமாக நிறைய யோசிக்க நேரம் உள்ளது. எங்களை நேரில் வந்து ஆதரித்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அதனால் எங்களை மன்னிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.