நாங்கள் வெற்றி பெற கிடைத்த வாய்ப்புகளை இழந்தோம் - ஆஷ்லே கார்ட்னர்!
டபியூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹீலி மேத்யூஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களையும், அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 34 ரன்களையும், போப் லிட்ச்ஃபீல்ட் 31 ரன்களையும், பார்தி ஃபுல்மாலி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவற, அந்த அணி 19.2 ஓவர்களில் 166 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், “துரதிர்ஷ்டவசமாக இன்று எங்களுடைய நாளாக இல்லை. ஆனால் இந்த குழுவை நினைத்து பெருமைப்பட நிறைய இருக்கிறது. இந்த போட்டியில் இருந்து பல நேர்மறையான விசயங்கள் வெளிவர உள்ளன. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நபர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த அணியை வழிநடத்த முடிந்ததில் முழுமையான மகிழ்ச்சி. ஆனால் இன்று இல்லை.
இந்த குழுவில் சில அற்புதமான இளம் வீராங்கனைகள் உள்ளனர். இந்த ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளைச் செய்துள்ளோம். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று இடங்களிலும் நாங்கள் சிறப்பாக இல்லை. அதனால் இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற கிடைத்த வாய்ப்புகளை இழந்தோம். அதுமட்டுமிலாமல் இன்றைய போட்டிக்கான எங்கள் அணியில் காயம் காரணமாக டியான்டிரா டோட்டின் விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது.
Also Read: Funding To Save Test Cricket
ஏனெனில் தொடர் முழுவதும் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஒருவரை இழப்பது நிச்சயமாக சிறந்ததல்ல. ஆனால் டோட்டினுக்கு சரியான மாற்றமாக கிப்சன் இருந்தார் என்று நம்பிகிறேன். மேற்கொண்டு டியான்டிர டோட்டினும் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன். அவரின் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறினர். மேற்கொண்டு அவரது காயம் குறித்து எனக்கு அதிகம் கேள்விப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.