ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கவில்லை - ரிஷப் பந்த்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் ஐடன் மாக்ரம் 47 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 238 ரன்களைக் குவித்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே 61 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 45 ரன்களையும், இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ரிஷப் பந்த், “நாங்கள் பேட்டிங் செய்தபோது இந்த ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் பவர்பிளேக்குப் பிறகு நாங்கள் அதைச் செய்தோம். முதல் டைம்அவுட்டுக்குப் பிறகு நாங்கள் பந்து வீச்சாளர்களிடம் சென்று, திட்டங்களின் படி செரியாக செயல்பட வேண்டி கேட்டுக்கொண்டோம். மேலும் தேவையில்லாமல் எதையும் முயற்சி செய்ய வேண்டாம், அடிப்படைகளை சரியாகச் செய்யுங்கள் என்று கூறினோம்.
Also Read: Funding To Save Test Cricket
போட்டிக்கு நடுவில் நாங்கள் சில உரையாடல்களைக் கொண்டிருந்தோம். ஏனெனில் எதிரணி வீரர்கள் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அவர்களின் கவனத்தை சிதைக்கும் விதமாக நாங்கள் ஆட்டத்தை மெதுவாக்க அதனை செய்தோம். அது சில நேரங்களில் வேலை செய்கிறது, சில நேரங்களில் அது வேலை செய்யாது. இப்போட்டியில் நாங்கள் வலது-இடது பேட்டர்கள் வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்துல் சமத்தை முன் கூட்டி களமிறக்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.