இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீச தடுமாறியதே எங்கள் வெற்றிக்கு காரணம் - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் நேற்று கௌகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் கடைசி ஓவர் வரை விளையாடினால் தங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்பியதாக சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்ததால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீச தடுமாறியது தங்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டி மிகவும் வேகமாக நடந்தது. அதிகப்படியான பனி இருந்ததால் இந்திய பவுலர்களுக்கு சரியான யார்க்கர் பந்துகளை வீசுவது கடினமாக இருந்தது. அதனால் இலக்கைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் கடைசி வரை நின்றால் போட்டியில் வெல்ல முடியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் அக்சர் பட்டேலை நொறுக்குவதற்காக மேத்யூ வேட் தயாராக இருந்தார். கடைசி நேரங்களில் அவர் விளையாடிய ஆட்டம் போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு எனக்கு மிகவும் உதவியது” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல தம்முடைய முதல் 3 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியும் 19ஆவது ஓவரில் அக்சர் படேல் 22 ரன்களை வாரி வழங்கும் அளவுக்கு பனியின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.