ஒரு ரன்-அவுட் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது  - கேஎல் ராகுல்!

Updated: Thu, Apr 20 2023 12:05 IST
Image Source: Google

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் எடுத்தார் சஞ்சு சாம்சன். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் மந்தமான துவக்கம் கொடுத்தனர். மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக அமைந்ததால் வேகமாக ரன்குவிக்க முடியாமல் திணறினர்.

கேஎல் ராகுல் 39 ரன்கள், கைல் மேயர்ஸ் 51 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 21 ரன்கள், பூரான் 29 ரன்கள் அடித்துக்கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது. 155 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் மிகச்சிறப்பாக அமைந்தது. 

ஜெய்ஷ்வால் 44 ரன்கள், பட்லர் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் ஓவரில் ஆட்டமிழந்தனர். துரதிஷ்டவசமாக பின்னர் வந்த வீரர்கள் எவருமே பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்களில் 155 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. தட்டுத்தடுமாறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி. 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 

போட்டி முடிந்தபிறகு பேட்டியளித்த வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல், “முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்த பிறகு, நானும் கைல் மேயர்ஸ்-உம் பேசிக் கொண்டது என்னவென்றால், இந்த பிட்ச் பௌலிங் செய்ய சாதகமாக இருக்கிறது. 160 ரன்கள் அடித்தால் போதுமானது என்று நினைத்தேன். பின்னர் போட்டியின் இரண்டாம் பாதியில் சற்று பேட்டிங் செய்ய நன்றாக இருந்ததால் 170 ரன்கள் வரை அடித்தால் சரியாக இருக்கும். ஆனால் 180 ரன்கள் என்பது மிகவும் அதிகம் என்று முடிவு செய்தோம்.

மைதானத்தில் கடைசி வரை பனிப்பொழிவு இல்லை. ஆகையால் நாங்கள் 155 ரன்கள் அடித்தபோது, 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு போட்டியை வெற்றி பெற்று கொடுத்து விட்டார்கள். முதல் 10 ஓவர்களில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. 

அமித் மிஸ்ரா சஞ்சு சாம்சனை ரன்-அவுட் செய்த பிறகு நம்பிக்கை வந்தது. அதன்பிறகு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியதால் நிச்சயம் ஆட்டம் நமது பக்கம் என்று உறுதியாக நம்பினேன். ராஜஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எத்தகைய அபாயகரமானவர்கள் என்று தெரியும். அதனால் அவர்களுக்கென்று திட்டமிட்டு வந்திருந்தோம்.” என்றும் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை