வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா தொடர் நாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்த காரணத்தை நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணி வீராங்கனைகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் எங்கள் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அமெலியா கெர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், நாங்கள் 12 பேர் கொண்ட அணியாக குறைந்தோம். ஆனாலும் கடினமான சூழ்நிலையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், எங்கள் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறோம். அந்தவகையில் நாங்கள் வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம்.
Also Read: Funding To Save Test Cricket
இந்த போட்டியில் நாங்கள் தொடக்கத்திலேயே 2, 3 விக்கெட்டுகளை இழந்த சமயத்திலும் 232 ரன்களைச் சேர்திருந்தோம். ஆனால் அந்த ரன்கள் நாங்கள் வெற்றிபெற போதுமானதாக இல்லை. இந்த போட்டிக்கான பிட்ச் சற்று கடினமாக இருந்தது. இப்போட்டியில் அனைத்து வீரர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றிகாக போராடியது சிறப்பாக இருந்தது. இருப்பினும் நாங்கள் போதுமான அளவில் சிறப்பாக செயல்படவில்லை” என தெரிவித்துள்ளார்.