ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - டாம் லேதம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம், “கடந்த மூன்று நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் இந்த நிலையில் இருப்பேனா என்று நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், நான் இந்த நிலையில் இருக்க விரும்புவேன் என்று மட்டும் தான் கூறி இருப்பேன். இங்கு வந்து நாங்கள் அபாரமான கிரிக்கெட்டை விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மேலும் எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தொடரில் பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் அந்த விக்கெட் விளையாட மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்று நினைக்கிறேன். எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக எங்களால் அங்கு சாதிக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த பிட்ச்சுகளில் இயற்கையாகவே இந்தியா விளையாடும் விதம், அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள் என்பது தெரியும்.
Also Read: Funding To Save Test Cricket
அதுகுறித்து மட்டும் தான் நாங்கள் ஆலோசித்து திட்டமிட முயற்சித்தோம். இன்று கூட, ரிஷப் பந்த் களத்தில் இருக்கும் வரை ஆட்டம் முடிந்துவிட்டது என்று நான் நிச்சயமாக நம்பவில்லை, மேலும் அவர்கள் அணி முழுவதும் மேட்ச் வின்னர்கள் உள்ளனர், அவர்கள் நீண்ட காலமாக விளையாடி வரும் வழியில் அவர்கள் வெற்றிகரமாக விளையாடி வருகின்றனர். ஒரு அணியாக நாங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டது குறித்து நான் நிச்சயமாக பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.