இந்தியாவை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் - வக்கார் யூனிஸ்!

Updated: Sat, Aug 05 2023 13:36 IST
இந்தியாவை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் - வக்கார் யூனிஸ்! (Image Source: Google)

ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி கண்டு வந்தது. ஆனால், அமீரகத்தில் 2021இல் நடந்த உலகக் கோப்பை டி20-யில் பாபர் அசமும், ரிஸ்வானும் விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை வென்று கொடுத்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அசாத்திய இன்னிங்சினாலும், அஸ்வினின் சமயோசித பேட்டிங்கினாலும் பாகிஸ்தானை த்ரில் போட்டியில் இந்திய அணி வீழ்த்தி அற்புத வெற்றியைப் பெற்று மீண்டும் ஒரு ஐசிசி தோல்வியை பாகிஸ்தானுக்கு பரிசாக அளித்தது.

இந்நிலையில், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை தனியாகவே நின்று வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் காலங்களில் இப்போது உள்ளது போல் இந்தியாவுடன் ஆடுவது என்றால் பெரிய அளவில் பிரஷர் இருக்காது. ஒரு அணியுடன் அடிக்கடி ஆட முடியாத போது. அதுவும் இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் ஐசிசி போட்டிகளில் மட்டும் மோதுவது என்பது நிச்சயம் வீரர்களுக்கு பிரஷர் கொடுப்பதுதான். பிரஷர் மும்மடங்கு அதிகரிக்கவே செய்யும்.

எங்கள் காலத்தில் நாங்கள் அதிகம் இந்தியாவுடன் ஆடினோம். ஆனால், உலகக் கோப்பைகளில் இந்தியாவுடன் தோற்றுப் போவோம். ஆனால், இப்போதுள்ள வீரர்கள் பிரஷர் சூழலை நன்றாகக் கையாள்கிறார்கள். பாகிஸ்தானில் மேட்ச் வின்னர்கள் இந்த முறையும் போட்டியை எங்களுக்கு வென்று தருவார்கள். அது மட்டுமல்ல இந்தியாவை வீழ்த்துவது மட்டுமல்லாது இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணியாகவே களமிறங்கும் பாகிஸ்தான் அணி என்பதில் ஐயமில்லை.

சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி அழுத்தங்களை சிறப்பாக கையாண்டு வருகிறது. எங்கு ஆடினாலும் சரி, அது இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஆடினாலும் சரி அல்லது பாகிஸ்தானில் ஆடினாலும் சரி அல்லது வேறு எங்கு ஆடினாலும் சரி இப்போது கவலையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம் திறமைகளை ஒழுங்காக வடிவமைத்து திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே களத்தில் வெற்றி காண்போம்.

எங்களிடம் மேட்ச் வின்னர்கள் உள்ளனர். தனியாகவே ஆடி எந்த அணியையும் தோற்கடிக்கும் வீரர்கள் இப்போதைய பாகிஸ்தான் அணியில் இருக்கின்றனர். பாபர் அஸம், ஷாஹின் அஃப்ரீடி, ஃபகர் ஜமான், ரிஸ்வான் ஆகியோர் ஆச்சரியங்களை நிகழ்த்தக் கூடியவர்கள். தனியாகவே நின்று வென்று கொடுக்கும் திறமை மிக்கவர்கள். ஆகவே பாகிஸ்தானிடம் பெரிய பலம் உள்ளது. அனைத்துத் திறமைகளையும் ஒருங்கிணைத்து ஆட வேண்டும் என்பதே முக்கியம்” என அவர் கூறினார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை