இன்னொரு ஆட்டத்தை விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும் - ஹர்மன்பிரீத் கவுர்!

Updated: Mon, Oct 14 2024 09:12 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களையும், தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 20 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடர் இணைந்த தீப்தி சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.

இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்துடன், இறுதிவரை ஆட்டமிழக்கால் 59 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் இந்திய அணியால் 142 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.  

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் அரையிறுதி கனவானது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தோல்விக்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத்  கவுர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அவர்களின் முழு அணியும் பங்களிப்பதாக நான் நினைக்கிறேன், அவர்கள் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை சார்ந்த அணி இல்லை. மேலும் அவர்களிடம் பங்களிக்கும் ஆல்-ரவுண்டர்கள் நிறைய உள்ளனர். நாங்களும் நன்றாக திட்டமிட்டு விளையாட்டில் இருந்தோம். ஆனால் அவர்கள் எளிதாக ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை.

அவர்கள் அனுபவம் வாய்ந்த அணியாக செயல்பட்டனர். அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று, ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் தவறவிட்டாலும், நீங்கள் விளையாடும் பதினொன்றை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ராதா நன்றாக பந்துவீசினார், அவர் விளையாட்டில் இருந்தார் மற்றும் அவர் நன்றாக பீல்டிங் செய்தார். மேலும் இது எட்டக்கூடிய இலக்காகத் தான் இருந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

நானும் தீப்தியும் பேட்டிங் செய்யும்போது சில லூஸ் பந்துகளை அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். எங்கள் கைகளில் எது இருந்ததோ, அதைச் செய்ய முயற்சித்தோம், ஆனால் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இன்னொரு ஆட்டத்தை விளையாட வாய்ப்பு கிடைத்தால், அது சிறப்பாக இருக்கும். ஆனால் இல்லையேல், யார் இருக்க தகுதியானவர்களோ, அந்த அணி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை