இந்திய அணிக்கு டாப் கியரில் விளையாடும் வீரர்கள் தான் வேண்டும் - விரேந்திர சேவாக்!

Updated: Tue, Oct 03 2023 19:20 IST
Image Source: Google

தற்போது இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட தலை சிறந்த அணியாக திகழ்கிறது. தற்பொழுது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் எழுச்சி அடைந்த அணிகளாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. காரணம் அவர்களிடம் பேட்டிங் வரிசை மிக நீளமாக இருக்கிறது. 

மேலும் அவர்களிடம் சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் விளையாடக்கூடிய பிளாஸ்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களாலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்காலத்தில் அபாயகரமான அணிகளாக தெரிகிறார்கள். குறிப்பாக மிக நீண்ட உலக கோப்பை தொடர்களில் இவர்கள் ஆபத்தான அணிகள்.

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் பிளாஸ்டர்களாக இருப்பது சூரியகுமார் யாதவ் மட்டும்தான். மற்ற அனைவரும் ஒரே கியரில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களாக இருந்து வருகிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கேஎல் ராகுல் இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பேட்மேன்கள்.

சூழ்நிலையை பொருட்படுத்தாமல் அதிரடியாக விளையாடி ரன்களைக் கொண்டு வந்து சூழ்நிலையை மாற்றக்கூடிய பேட்ஸ்மேன் இப்போதைய நவீன கிரிக்கெட்டுக்கு தேவையாக இருக்கிறார்கள். இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இளம் இந்திய அணி பிளாஸ்டர்களை கொண்ட அணியாக இருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று டி20 கிரிக்கெட்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக 49 பந்தில் சதம் அடித்திருக்கிறார். இறுதிக் கட்டத்தில் வந்த ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் எடுத்திருக்கிறார்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், “ஒரே கியரில் விளையாடும் பல பேட்டர்கள் எங்களிடம் இருப்பதாக உணர்கிறேன். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் டாப் கியரில் விளையாடக்கூடிய ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்களை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்களைக் கொண்டு ஆபத்தான அணியாக மாற வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை