பும்ராவின் கம்பேக் குறித்து தகவலளித்த சேத்தன் சர்மா!
இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கும் பும்ரா, டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு காயம் எற்பட்டு தொடரிலிருந்து விலகினார். இதன் காரணமாக, இந்திய அணி உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், பும்ரா விவகாரம் குறித்து தேர்வுக்குழுத் தங்களது தவறை ஒப்பு கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேத்தன் சர்மா, “டி20 உலககோப்பை தொடரில் பும்ரா விளையாட வேண்டும் என்பதற்காக அவரை அவசப்படுத்தினோம். காயத்திலிருந்து குணமடைந்த உடனே அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்தோம்.
இப்படி செய்ததால் தற்போது என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். டி20 உலககோப்பையில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் பும்ரா விசயத்தில் இனி பொறுமை காப்பது அவசியம். இதனால் தான் நியூசிலாந்து, வங்கதேச தொடரில் அவரை நாங்கள் பரிசீலிக்கவில்லை.
வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட பும்ரா உடல் தகுதியை பெறுவார் என நம்புகிறேன். ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக இந்திய அணியின் ஒரு பகுதியாக பும்ரா இருப்பார்” என்று சேத்தன் சர்மா கூறினார். இதன் மூலம் பும்ரா விவகாரத்தில் தவறு செய்துவிட்டதை பிசிசிஐ ஒப்பு கொண்டுள்ளது.
இதனிடையே நியூசிலாந்து தொடரில் உம்ரான் மாலிக், குல்தீப் சென் போன்ற வேகப்பந்துவீச்சாளருக்கும், வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் யாஷ் தயால் போன்ற இளம் வீரர்களுக்கும் தேர்வுக்குழுவினர் வாய்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கு பதில், ஜூனியர்களுக்கு வழங்கி இருக்கலாம் என்று ரிசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.