அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!

Updated: Sun, Oct 29 2023 14:04 IST
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன்ஸ் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68, பரேசி 41 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹதி ஹாசன், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 230 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்பம் முதலே நெதர்லாந்தின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 42.2 ஓவரில் வெறும் 142 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு லிட்டன் தாஸ், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் போன்ற முக்கிய விரல்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 35 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் மீக்ரன் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில், தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் பால் வான் மெக்கீரென், “இந்த நாள் எங்களுக்கு மிகவும் ஒரு ஸ்பெஷலான நாளாக மாறி உள்ளது. ஏனெனில் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியது போன்று நாங்கள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம். எனவே எங்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.

கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது மீண்டு வந்துள்ளது மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த போட்டியின் போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் போது பாதி ஓவர்களை கடந்த பின்னர் 230 முதல் 240 ரன்கள் வரை அடித்தாலே இந்த மைதானத்தில் எதிரணியை சுருட்டி விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். அந்த வகையிலேயே நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். துவக்கத்தில் ஆரியன் தத் மற்றும் வான் பீக் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசி நல்ல துவக்கத்தை தந்தனர்.

அதன்பிறகு என்னாலும் சிறப்பாக பந்து வீச முடிந்தது. அதேபோன்று எங்களது அணியின் வீரர்கள் பீல்டிங்கில் கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இந்த போட்டியில் என்னை ஆட்டநாயக்கனாக தேர்வு செய்தது ஒரு கடினமான தேர்வாகவே இருந்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு எங்களது அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை