நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது - தசுன் ஷனகா!

Updated: Wed, Oct 11 2023 11:49 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 344/9 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் அதிரடியாக சதமடித்து 122 ரன்களும், சமரவிக்கிரமா சதமடித்து 108 ரன்களும் விளாசி உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைக்க உதவினார்கள். சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசான் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை தொடர்ந்து 345 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 12, பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 37/2 என ஆரம்பத்திலேயே சரிந்த பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட போது மறுபுறம் நங்கூரமாக நின்று சவாலை கொடுத்த தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 37 ஓவர்கள் வரை நிலைத்து நின்று சதமடித்து 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 113 ரன்கள் குவித்தார். இடையே சௌத் ஷாக்கீல் 31 ரன்கள் குவித்து அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய முகமது ரிஸ்வான் சதமடித்து 131 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 48.2 ஓவரிலேயே 345/4 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக உலக சாதனை படைத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்களை சாய்த்தார். இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக 20 – 25 ரன்களை எடுக்க தவறியது தோல்வியை கொடுத்ததாக இலங்கை கேப்டன் சனாகா வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய தசுன் ஷன்கா “குசால் மெண்டிஸ் வேறு மண்டலத்தில் விளையாடுகிறார். குறிப்பாக பயிற்சி போட்டியில் நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடிய அவர் முதல் போட்டியில் 70+ ரன்களும் இப்போட்டியில் சதமடித்தது போல இன்னும் நிறைய அடிப்பார். சமரவிக்கிரமாவும் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் பேட்டிங்க்கு சாதகமான இந்த பிட்ச்சில் இன்னும் நாங்கள் 20 – 25 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்திருக்க வேண்டும். 

ஆனால் அதை எடுத்து விடாத அளவுக்கு ஸ்லோ பந்துகளை வீசிய பாகிஸ்தான் பவுலர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இதற்கு மேல் எங்கள் பவுலர்களிடமும் எதையும் கேட்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு எளிதான திட்டங்களை மட்டுமே கொடுத்தோம். இருப்பினும் நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது. அதே போல ஃபீல்டிங்கில் நாங்கள் நிறைய தவற விட்டோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை