பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை - பாபர் அசாம்!

Updated: Mon, Jun 10 2024 11:21 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வானும் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம், “பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததும், அதிகமான டாட் பந்துகளை விளையாடியதுமே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இதுவே எங்களது தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது.

எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. அதன்படி நாங்கள் செய்ய நினைத்தை ஓரளவிற்கு சிறப்பாக செய்தோம், ஆனால் அதிகமான டாட் பால்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடைசி நேரத்தில் களமிறங்கும் டெய்லெண்டர்கள் அதிகமான ரன்கள் எடுத்து கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களையும் நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது, ஆடுகளம் மிக சிறப்பாகவே இருந்தது. நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம். எங்கு தவறு நடந்தது, தோல்விக்கான காரணம் என்ன என்பதையும், தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்வோம். அடுத்த இரண்டு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த தோல்வியை கடந்து செல்வதும் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவதும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை