ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாட அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது - கேரி ஸ்டெட்!

Updated: Fri, Sep 13 2024 22:12 IST
Image Source: Google

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை இந்தியாவின் உத்திரபிரதேசத்திலுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாகவும், ஈரப்பதம் காரணமாக இப்போட்டியின் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கைவிடப்பட்டு வந்தது. 

அந்த வகையில் போட்டியின் கடைசி நாளான இன்றும் மழை பெய்த காரணத்தால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால், ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக கைவிடப்பட்ட 7ஆவது டெஸ்ட் போட்டி என்ற வரலாற்றையும் படைத்துள்ளது. 

இந்நிலையில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த போட்டி கைவிடப்பட்டது குறித்து பேசிய நியூசிலாந்து அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “இந்த போட்டி நடைபெற இருந்த இந்த மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரத்தில் 1200மிமீ மழை பெய்துள்ளது.

மேலும் இந்த போட்டியின் முதல் இரண்டு நாட்கள் நன்றாக இருந்தபோதிலும் முந்தைய இரவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மைதானம் மிகவும் மென்மையாக இருந்தது மற்றும் நடுவர்கள் விளையாடுவதற்கு தகுதியற்றதாக கருதினர். மேலும் அடுத்த வாரம் (இலங்கைக்கு எதிரான) டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் செல்லும்போது, ​அதற்கு தேவையான பயிற்சி இந்த போட்டியில் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த வாய்ப்பை இழந்தது எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

Also Read: Funding To Save Test Cricket

போட்டி நடைபெறாதது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து விளையாடவிருந்த முதல் டெஸ்ட் போட்டி இது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். அதனால் இரு அணி வீரர்களும் உண்மையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏனெனில் ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக இதுபோல் விளையாட எங்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை