ஜஸ்பிரித் பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகவில்லை - சவுரவ் கங்குலி!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. டாஸ் போடும் போது இதுகுறித்து பேசியிருந்த ரோஹித் சர்மா, ‘‘பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி இருப்பாதல், இப்போட்டியில் பங்கேற்கவில்லை’’ எனக் கூறியிருந்தார். பும்ரா ஆசியக் கோப்பையின்போதும் இதே பிரச்சினை காரணமாகத்தான் விலகினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா, ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார்.
அப்போதே, அவரது உடற்தகுதி குறித்து சந்தேகங்கள் எழுந்தன. பும்ரா வழக்கமான உற்சாகத்துடன் பந்துவீசவில்லை, முதுகு வலி பிரச்சினையில் இருந்து அவர் இன்னும் குணமடையவில்லை போல என பலர் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலிருந்து விலகிய அவர், மருத்துவமனையில் சிகிச்சைபெற சென்ற நிலையில் அவரது காயம் குணமடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளிலும், டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பும்ராவுக்கு மாற்று யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் முகமது சிராஜ்தான், பும்ராவுக்கு மாற்றாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும், டி20 உலகக் கோப்பையிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், பும்ரா டி20 உலகக் கோப்பை அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகளில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னமும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “ஜஸ்பிரித் பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகவில்லை. உலகக் கோப்பைக்கு இன்னும் சில காலம் உள்ளது” என கூறியுள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையளிக்கும் விசயமாக மாறியுள்ளது.