வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் மைக்கேல் லூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் பிராத்வைட் 3 ரன்களிலும், அலிக் அதானாஸ் ஒரு ரன்னிலும், கவேம் ஹாட்ஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேசி கார்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 63 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்பை பின்னுக்கு தள்ளி 13ஆவது இடத்தை பிடித்துள்ளார் ஹோல்டர். இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேசன் ஹோல்டர் 162 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிஷப் 43 போட்டிகளில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.