அதிவேக அரைசதம்; ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சமன்செய்த மேத்யூ ஃபோர்ட்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டப்ளினில் நடைபெறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேசி கார்டி 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 102 ரன்களையும், மேத்யூ ஃபோர்ட் 2 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 58 ரன்களையும், கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்களையும் ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களைக் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் லியாம் மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளையும், பேரி மெக்கர்த்தி, ஜோஷுவா லிட்டில் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் அயர்லாந்து அணி இலக்கை நோக்கி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரண்மாக போட்டி தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய மேத்யூ ஃபோர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸின் உலக சாதனையையும் சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் மேத்யூ ஃபோர்ட் 16 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தை விளாசிய வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார்.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஏபிடி வில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைசதம் அடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், அதனை மேத்யூ ஃபோர்ட் தற்போது சமன்செய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் இலங்கையின் குசால் மெண்டிஸ், சனத் ஜெயசூர்யா, நியூசிலாந்தின் மார்டின் கப்தில் மற்றும் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 17 பந்துகளில் அரைசதம் கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
Also Read: LIVE Cricket Score