பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை பந்தாடி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

Updated: Fri, May 31 2024 12:04 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற 12ஆவது பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். 

அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவேல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

இதில் ரோவ்மன் பாவெல் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 18 ரன்களையும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 15 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஆஷ்டன் டர்னர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஆஷ்டன் அகர் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய டிம் டேவிட், மேத்யூ வேட் ஆகியோரும் தலா 25 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் அரைசதம் கடந்திருந்த ஜோஷ் இங்கிலிஸ் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய நாதன் எல்லிஸும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை