மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டது.
போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீரமானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 20, ரஷாதா வில்லியம்ஸ் 30, காம்பெல் 22 ரன்களைச் சேர்க்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் நிதா தார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முனீபா அலி 5 ரன்னிலும், சித்ரா அமீன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் பிஸ்மா மரூஃப் 26 ரன்களிலும், நிதா தார் 27 ரன்களிலும், அலியா ரியாஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளாலும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.