NED vs WI, 3rd ODI: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது விண்டீஸ்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 24 ரன்கள் எடுத்த நிலையில் லீடே பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - சமாரா ப்ரூக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிவந்த இருவரும் அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி நெருங்கி கொண்டிருந்தனர்.
இதில் கைல் மேயர்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய கைல் மேயர்ஸ் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த சமாரா ப்ரூக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவு - விக்ரம்ஜித் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 98 ரன்களைச் சேர்த்தனர்.
இதில் 54 ரன்கள் எடுத்த விக்ரம்ஜித் சிங் ஆட்டமிழக்க, அடுத்துவந்த முசா அஹ்மத் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேக்ஸ் ஓடவுட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 49.5 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை மட்டுமே எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷெமோன் லீவிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது.