ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறுமா?

Updated: Wed, Aug 24 2022 16:02 IST
Image Source: Google

2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துள்ளது என்றே கூறலாம். 

ஏனெனில் நியூசிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3ஆவது ஒருநாள் ஆட்டத்தை வென்றதுடன் ஒருநாள் தொடரையும் சமீபத்தில் கைப்பற்றியது. இந்தத் தோல்வியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியின் சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 நாடுகள் மட்டுமே நேரடியாகத் தகுதி பெறும். சூப்பர் லீக் சுற்றில் மீதமுள்ள 5 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடினால் மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். தகுதிச்சுற்றில் இந்த 5 அணிகள் உள்பட 10 அணிகள் பங்கேற்கும். 

அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும். 2023 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. சூப்பர் லீக் புள்ளிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 88 புள்ளிகளைக் கொண்டுள்ளது. 

கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இரு புள்ளிகளை இழந்தது. புள்ளிகள் பட்டியல் அந்த அணி தற்போது 7ஆம் இடத்தில் உள்ளது. அதன் கீழே ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு விளையாட வேண்டிய 24 ஒருநாள் போட்டிகளையும் விளையாடி முடித்து விட்டது. இதனால் அந்த அணியால் இனிமேல் கூடுதலாக எந்தப் புள்ளியையும் பெற முடியாது. 

ஆனால் ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இன்னும் பல ஆட்டங்களில் விளையாடவுள்ளன. அதன்படி ஆஸ்திரேலியா 12, இலங்கை 18, தென் ஆப்பிரிக்கா 13 ஆட்டங்களில் இதுவரை விளையாடியுள்ளன. இதனால் இந்த அணிகள், புள்ளிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸைத் தாண்டிச் செல்லும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. 

இந்தச் சூழலில் ஜிம்பாப்வேயில் அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றில் போட்டியில் விளையாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 1975, 1979 உலகக் கோப்பைப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை