IRE vs WI, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
Ireland vs West Indies, 3rd T20I: அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற இருந்த முதலிரண்டு டி20 போட்டிகளும் மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் எவில் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். பின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களை எடுத்திருந்த ஷாய் ஹோப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெலும் 2 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர்.
அதன்பின் சதத்தை நோக்கி விளையாடி வந்த எவின் லூயிஸ் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 91 ரன்களை எடுத்து ஆட்டமிழந்ததுடன் 9 ரன்களில் தனது சதத்தையும் தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஷிம்ரான் ஹெட்மையரும் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேசி கார்டி மற்றும் ஜேசன் ஹோல்டர் இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்தது. இதில் ஜேசன் ஹோல்டர் 18 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஷெஃபெர்டும் தனது அதிரடியைக் காட்ட தொடங்கினார்.
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 சிக்ஸர்களுடன் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 256 ரன்களைக் குவித்துள்ளது. அயர்லாந்து அணி தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், பேரி மெக்கர்த்தி மற்றும் பெஞ்சமின் வைட் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ராஸ் அதிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் 13 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அதிருடன் ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்னிலும், 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்னில் ரோஸ் அதிரும் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ஒரு ரன்னிலும், டிம் டெக்டர் 7 ரன்னிலும், ஜார்ஜ் டக்ரேல் 15 ரன்னிலும், பேரி மெக்கர்த்தி 2 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் மார்க் அதிர் 4 சிக்ஸர்களுடன் 31 ரன்க்ளையும், லியாம் மெக்கர்த்தி 16 ரன்களையும் சேர்த்த நிலையிலும் அயர்லாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எவின் லூயிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.