நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
இதில் அரைசதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த விக்ரம்ஜித் சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ் ஓடவுட் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் அவருடன் இணைந்த ஸ்காட் எட்வர்ஸும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். இதில் மேக்ஸ் ஓடவுட் 51 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த ஸ்காட் எட்வர்ஸ் அரைசதம் கடந்தார்.
அதனைத்தொடர்ந்து 68 ரன்களில் ஸ்காட் எட்வர்ஸும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 48.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும் 214 ரன்களைச் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமாரா ப்ரூக்ஸ் 6 ரன்னிலும், ஷாய் ஹோப் 18 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் வந்த பொன்னர், கேப்டன் நிக்கோலஸ் பூரன், கைல் மேயர்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 60 ரன்களுக்குள்ளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - கேசி கார்டி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் பிராண்டன் கிங் அரைசதம் விளாசி அசத்தினார்.
இறுதிவரை இந்த இணை விக்கெட்டை விடாமல், 45.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை எட்ட உதவியது. இதில் பிராண்டன் கிங் 91 ரன்களுடனும், கேசி கார்டி 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.