WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நடைபெற்று வரும் ஒரு நாள் தொடருக்கு பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி டிரினிடாட் பிரைன் லாரா மைதானத்தில் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலும், கடைசி இரண்டு போட்டி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்திலும் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-1 என சமன்படுத்தி உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்த நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணிக்கு ரோமன் பவல் கேப்டனாக தொடர்கிறார். முந்தைய கேப்டன் நிக்கோலஸ் பூரன் அணிக்குத் திரும்பி இருக்கிறார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஓசோன் தாமஸ் வந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக வலிமையான ஒரு அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அணி தேர்வு பற்றி வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழுவின் தலைவராக இருக்கும் ஹெய்ன்ஸ் கூறுகையில் “அடுத்த டி20 உலக கோப்பையை மனதில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சரியான சேர்க்கைகளை கண்டறியும் முயற்சியில் பல்வேறு திட்டங்களில் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் நம்பக்கூடிய விரும்பக்கூடிய ஒரு அணியை தயார் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். அடுத்த வருடம் நாங்கள் ஒரு உலகக் கோப்பையை நடத்த இருக்கிறோம். எங்கள் வரிசையில் சில மேட்ச் வின்னர் இருக்கிறார்கள். நாங்கள் முதல் டி20 போட்டிக்கான சரியான அணியை பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (சி), கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், ஓபேட் மெக்காய், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒஷன் தாமஸ் மற்றும் ஓடியன் ஸ்மித்.