WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவாதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதேசமயம் மறுபக்கம் விளையாடிய வில் ஜேக்ஸ் 5 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த ஜோர்டன் காக்ஸ் ஒரு ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் லிவிங்ஸ்டோன் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் பில் சால்டுடன் இணைந்த சாம் கரணும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பில் சால்ட் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் சாம் கரண் 40 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பில் சால்ட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இணைந்த டேன் மௌஸ்லி - ஜேமி ஓவர்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த டேன் மௌஸ்லி 57 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் ஜேமிஸ் ஓவர்டன் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களைச் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், ரொமாரியோ ஷெஃபர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்காம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் எவின் லூயிஸ் 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பிராண்டன் கிங்குடன் இணைந்த கேசி கார்டி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் கேசி கார்டி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுபக்கம் பிராண்டன் கிங் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 102 ரன்களைச் சேர்த்த கையோடு பிராண்டன் கிங் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 128 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிராண்டன் கிங்கும், தொடர் நாயகனாக மேத்யூ ஃபோர்ட்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.