தனது சாதனையை முறியடித்த பும்ராவுக்கு விண்டீஸ் லெஜண்ட் லாரா வாழ்த்து!
கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. பின்னர், கொரோனா தொற்று பரவல் காரணமாக 5ஆவது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பர்மிங்காமில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் பும்ரா களமிறங்கினார்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்திருந்தது. இதில், ரிஷப் பந்த் சதம் விளாச, ஜடேஜா 83 ரன்களுடன் களத்திலிருந்தார்.
இந்நிலையில், இன்று 2ஆவது நாள் ஆட்டம் துவங்கியது. ஷமி 16 ரன்னில் அவுட்டான போதும், அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய ஜடேஜா சதம் விளாசி 104 ரன்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்தியா 400 ரன்களை கடப்பதே கடினம் என்ற நிலையில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83-வது ஓவரை வரலாறாக மாற்றினார் பும்ரா.
அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' ஆனதால் 5 ரன்கள் கிடைத்தது. அதற்கு அடுத்த பந்து நோபாலாக வந்ததால் அதை அலேக்காக தூக்கி சிக்ஸர் அடித்தார் பும்ரா. அதற்கடுத்து ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, இங்கிலாந்து பவுலர்கள் மிரண்டனர். தொடர்ந்து 5ஆவது பந்தில் ஒரு சிக்ஸும், கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்தான். அந்த ஓவரில் 35 ரன்கள் சேர்ந்த நிலையில், எக்ஸ்ட்ராஸ் நீங்கலாக அவர் விளையாசியது 29 ரன்கள். (4,6,4,4,4,6,1)
இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த 2003ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில், ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார் பிரைன் லாரா. இந்த உலக சாதனை பிரையன் லாராவிடம் 19 ஆண்டுகள் இருந்தது. இடையில் சில வீரர்கள் அவரது சாதனையை சமன் செய்தாலும் யாராலும் அதை முறியடிக்க முடியவில்லை. அந்த வகையில் தற்போது 19 ஆண்டுகள் கழித்து பும்ரா முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்ற பட்டத்துடன் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பிரைன் லாரா, “டெஸ்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த எனது சாதனையை முறியடித்த பும்ராவுக்கு எனது வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார். அவரது இந்த பதிவானது இனையத்தில் வரைலாகி வருகிறது.