உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்!

Updated: Tue, Jul 18 2023 12:24 IST
உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்! (Image Source: Google)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை சாம்பியன், கிரிக்கெட் களத்தில் வீழ்த்தவே முடியாத அணி என பல பெருமைகளை பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது மிகவும் மோசமாக நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடரில் தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுமோசமாக தோல்வியை தழுவியது. 

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வேகபந்து வீச்சாளருமான இயன் பிஷப் வீரர்களின் உடல் தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இயன் பிஷப், “ரஹீம் கார்ன்வால் போன்ற வீரர் அணியில் இருப்பதெல்லாம் உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் எவ்வாறு கையாளுகிறது என்பதை காட்டுகிறது. ரஹீம் கார்ன்வால் களத்தில் கூட முழுமையாக அவரால் நிற்க முடியவில்லை. இந்தியா போன்ற தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வீரர்களை தேர்வு செய்யுங்கள். மேலும் டோமினிகா வில் அமைக்கப்பட்ட ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் இருந்தது.

சதம் அடித்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவும் கூட கடினமாக முயற்சி செய்துதான் விளையாடினார்கள். மற்ற வீரர்கள் தடுமாறினார்கள். சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது கொஞ்சமாவது நமது அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டாமா? அப்படி செய்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று விடும் என்று நான் சொல்லவில்லை. ஏற்கனவே தடுமாறும் அணிக்கு ஒரு உதவியாவது நாம் செய்யலாம். போட்டியின் இரண்டாவது நாளில் பந்து அப்படி திரும்பியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அமைக்கப்படும் ஆடுகளமாவது ரன் குவிக்கவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான முறையிலும் ஆடுகளம் அமைக்க வேண்டும்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திறமையான வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போது உள்ள அணியில் அலிக் அதானாஸ் மட்டும்தான் ஓரளவுக்கு நன்றாக விளையாடும் வீரராக திகழ்கிறார். இதற்காக அவரை பிரைன் லாரா உடன் ஒப்பிட்டு  நெருக்கடிக்கு உள்ளாக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை