அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் - தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி!

Updated: Fri, May 24 2024 20:09 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், அடுத்ததாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, இரண்டாம் பாதி சீசனில் அபாரமாக விளையாடியதுடன் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்து யாரும் எதிர்பாராத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ஆனாலும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்தார். இதனையடுத்து ஆர்சிபி அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அணி வீரர்கள் அவர் குறித்து பேசிய காணொளியை வெளியிட்டுள்ளது. இதில் தான் தன்னம்பிக்கை இல்லாமல் போராடியபோது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய விராட் கோலி, களத்திற்கு வெளியே, நான் தினேஷ் கார்த்திக்குடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன். அவர் கிரிக்கெட் மட்டுமின்றி நிறைய விஷயங்களைப் பற்றி அபார அறிவு கொண்டவர். அவருடனான உரையாடல்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் எனக்கு சிறப்பாக அமையவில்லை. தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், என்னை உட்கார வைத்து பேசிய தினேஷ், ஒவ்வொரு விஷயங்களையும் அவர் எப்படி அணுகுகிறார் என்பதை நேர்மையாக எனக்கு விளக்கினார். எனவே, அவர் விரும்பும் விஷயங்களைப் பற்றி யாரிடமும் சென்று பேசும் அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை பொறுத்தவரை அதுதான் எனக்கு  மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை