இந்த வீரரை விட்ட வேற ஆல் இல்லை - இந்திய அணி தொடக்க வீரர் குறித்து சேவாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த தொடக்க வீரர் ஷிகர் தவான். இவர் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 144 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடி,10ஆயிரம் ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் இவரது இடம் இன்னும் இந்திய அணியில் கேள்விகுறியாகியே உள்ளது.
அதிலும், அடுத்தடுத்து சுப்மன் கில், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் என இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்பதால், தவான் தனது வாய்ப்பை விரைவில் இழக்கும் அபாயம் உள்ளது. டி20 போட்டிகளில் ரோஹித்துடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக ஆடிவருகிறார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் ஷிகர் தவானின் இடத்தை நிரப்ப எந்த வீரர் சரியாக இருப்பார் என்று வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக்,“தேவ்தத் படிக்கல் தான் எதிர்காலத்தில் ஷிகர் தவானுக்கு சரியான மாற்று வீரராக இருப்பார். தவான் இடது கை பேட்ஸ்மேன். இந்திய அணி ஓபனிங்கை பொறுத்தமட்டில் எப்போதுமே, இடது - வலது காம்பினேஷனிற்கு முக்கியத்துவம் கொடுக்கும். அந்தவகையில், ரோஹித் சர்மாவிற்கு மாற்றாக ஷுப்மன் கில், பிரித்வி ஷா ஆகிய வீரர்கள் உள்ளனர். இடது கை ஷிகர் தவானுக்கு சரியான மாற்றாக இளம் இடது கை அதிரடி வீரரான தேவ்தத் படிக்கல் தான் உள்ளார். அந்தவகையில், அவர் தான் தவானுக்கு சரியான மாற்று வீரர்” என்று சேவாக் கூறியுள்ளார்.