எந்த அணிக்கு செல்வார் ஸ்ரேயாஸ் ஐயர்? அஜும் சோப்ரா பதில்!

Updated: Sun, Nov 28 2021 13:36 IST
Image Source: Google

இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 2.6 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சில தினங்களில் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்ரேயஸ் ஐயருக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டே டெல்லி அணியை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். 2020ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிவரை கூட்டிச் சென்று பெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்தார். ஆனால், அதன் பிறகுதான் தரமான சம்பவம் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஸ்ரேயஸுக்கு காயம் ஏற்பட்டதால், 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களின்போது ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட்டார்.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது ஸ்ரேயஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்த நிலையில், வீரராக மட்டுமே நீடித்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டும் ரிஷப் பந்த்தான் கேப்டனாக இருப்பார் என தகவல் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த ஸ்ரேயஸ் கேப்டனாக நியமித்தால் மட்டுமே டெல்லி அணியில் இருப்பேன், இல்லையென்றால் என்னை கேப்டனாக நியமிக்கும் அணிக்கு சென்றுவிடுவேன் எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியானது.

இதனால், ஸ்ரேயஸ் ஐயரை தட்டித்தூக்க பல அணிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த இந்திய மகளிர் அணியின் லெஜண்ட், வர்ணனையாளர் அஜும் சோப்ரா, ஸ்ரேயஸ் ஐயர் எந்த அணிக்கு செல்வார் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஸ்ரேயஸ் ஐயரை வாங்கும் அணி, அவரை நிச்சயம் கேப்டனாக தேர்வு செய்யும். அவர் டெல்லி அணியிலிருந்து விடுக்கப்பட்டால், புதிய இரண்டு அணிகளில் ஒன்று நிச்சயம் அவரை தக்கவைக்கும். அப்போது அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கவில்லை என்றால், அந்த அணிகளுக்குச் செல்ல மாட்டார். அடுத்து கொல்கத்தா, பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்தான் புது கேப்டனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால், இந்த அணிகள் ஸ்ரேயஸை அணுகும்.

மேலும் ஸ்ரேயஸ் சிஎஸ்கேவுக்கு செல்ல வாய்ப்பிருக்கா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிஎஸ்கே அணிக்கு தற்போது கேப்டன் தேவையில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் தேவைப்படலாம். இதனால், ஸ்ரேயஸை வாங்க முயற்சிக்கும் என பலர் கூறுகிறார்கள். அதனை நான் ஏற்க மாட்டேன். ஏனென்றால், அந்த அணியில் இளம் வீரர்களை அவர்கள் தயார் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை