தோல்விக்கு கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம் - முகமது கைஃப்!
வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது.
அதை தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 46 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “9 விக்கெட்டுகள் எடுத்ததால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. பேட்டிங் மோசமாக இருந்தும் பவுலர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் யார் நம்முடைய டெத் பவுலர்? குல்தீப் சென்னா அல்லது தீபக் சஹரா? அது போக கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை விட்டோம். அதற்காக ராகுலை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர் சமீப காலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.
இருப்பினும் நல்ல ஃபீல்டரான அவர் தான் டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள்.
நாம் அழுத்தத்தில் நிறைய தவறுகளை செய்தோம். போதாக்குறைக்கு நாம் முக்கிய நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசினோம். ஆனால் உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து - நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உயரே பறக்கிறார்கள்.
மொத்தத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தில் நாம் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம்மிடம் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி வங்கதேசத்தை வெற்றி பெற வைத்து விட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்” என்று தெரிவித்தார்.