WI vs AUS, 3rd T20I: கிறிஸ் கெய்ல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று அதிகாலை செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 33 ரன்களையும், ஃபிஞ்ச் 30 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளட்சர், சிம்மன்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்ல் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கிறிஸ் கெய்ல் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார்.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி 14.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 67 ரன்களை எடுத்த கிறிஸ் கெய்ல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.