WI vs BAN, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் வங்கதேச அணியானது வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து வெஸ் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் மீண்டும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தன்ஸி ஹசன் 2 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் சௌமீயா சர்க்கார் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் - ஜக்கார் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் மெஹிதி ஹசன் 26 ரன்களுக்கும், ஜக்கார் அலி 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமிம் ஹொசைன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபின்ஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போட்டியிலும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 8 ரன்னிலும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றியும்,நிக்கோலஸ் பூரன் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக தொடங்கிய மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸும் 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோவ்மன் பாவெல் 6 ரன்களுக்கும், ரொமாரியோ ஷெஃபர்ட் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க 32 ரன்களைச் சேர்த்த நிலையில் ரோஸ்டன் சேஸும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அகீல் ஹொசைன் 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 102 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்க்தேச தரப்பில் அதிகபட்சமாக தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத் தவிர்த்து மஹெதி ஹசன், தன்ஸிம் ஹசன் சாகிப் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது.