WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 164 ரன்னில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் இன்று தொடங்கியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி கீமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் வங்கதேச அணி 10 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் ஷாத்மனுடன் இணைந்த ஷஹாதத் ஹொசைன் திபு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இதில் சிறப்பாக விளையாடி வரும் ஷாத்மன் இஸ்லாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷாத்மான் இஸ்லாம் 50 ரன்களுடனும், ஷஹாதத் ஹொசைன் திபு 12 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஷஹாதத் ஹொசைன் 22 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் ஜக்கார் அலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து 64 ரன்களில் ஷாத்மான் இஸ்லாமும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 36 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் - மைக்கைல் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் மைக்கைல் லூயிஸ் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் நஹித் ரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கிரெய்க் பிராத்வைட்டுடன் இணைந்த கேசி கார்டியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கிரேய்க் பிராத்வைட் 33 ரன்களுடனும், கேசி கார்டி 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் நஹித் ரானா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.