இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்னிலும், எவின் லூயிஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த கேசி கார்டி மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை பொறுப்புடன் விளைடாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 143 ரன்களாக உயர்ந்த நிலையில், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களை எடுத்த கையோடு கேசி கார்டி தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களை எடுத்த நிலையில் ரூதர்ஃபோர்ட் தனது விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷாய் ஹோப் தனது 17ஆவது சதத்தைப் பாதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் தனது பங்கிற்கு 3 சிக்ஸர்களை விளாசி 24 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியான் திரும்பினார். 

மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 117 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதியில் மேத்யூ ஃபோர்ட் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 23 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 328 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜான் டர்னர் மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஜேக்ஸ் 12 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் சால்டுடன் இணைந்த ஜேக்கப் பெத்தெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பில் சால்ட் 59 ரன்கள் எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்த ஜேக்கப் பெத்தெலும் 55 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் லிவிங்ஸ்டோனுடன் இணைந்த சாம் கரணும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்கள் கடந்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லிவிங்ஸ்டோன் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்து 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த லியாம் லிவிங்ஸ்டோன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News