WI vs ENG, 2nd T20I: பட்லர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், எவின் லூயிஸ் 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 14 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோவ்மன் பாவெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபர் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத், லியாம் லிவிங்ஸ்டோன், டேன் மௌஸ்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜேக்ஸுடன் இணைந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தைவெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினர். அவருடன் இணைந்து வில் ஜேக்ஸும் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. இதில் ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் வில் ஜேக்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 83 ரன்களை எடுத்த கையோடு பாட்லரும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் லியாம் லிவிங்ஸ்டோன் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 14.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என்ற கணக்கி டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.