WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் கோலி சதம் பதிவு செய்தார். ரோஹித் சர்மா, ஜெய்ஷ்வால், ஜடேஜா மற்றும் அஸ்வின் அரைசதம் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா, 44 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால், 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கில், 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடிய இஷான் கிஷன், 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி விரட்டியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரீத்வொயிட் மற்றும் சந்தர்பால் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். இதில், பரீத்வொயிட் 28 ரன்களில் விக்கெட்டானர். அடுத்து களமிறங்கிய மெக்கன்சி ரன் எடுக்காமல் வெளியேற, நான்காம் நாள் ஆட்ட முடிவில், சந்தர் பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவை என்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், மழை பெய்தால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மழை இடைவிடாமல் பெய்தால், ஐந்தாம் நாள் ஆட்டமான இன்றைய போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்ட போட்டி டிரா ஆன நிலையில், தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.