WI vs SA, 1st T20I: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Fri, May 24 2024 11:34 IST
Image Source: Google

 

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராண்டன் கிங் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிராண்டன் கிங்குடன் இணைந்த கைல் மேயர்ஸும் அதிரடியாக விளையாட அணியின்ன் ஸ்கோரு மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய பிராண்டன் கிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்னர்ஷிப்பும் அமைத்தனர். 

பின்னர் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 79 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பிராண்டன் கிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய கைல் மேயர்ஸும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரோஸ்டன் சேஸ் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஓட்னியல் பார்ட்மேன், பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கியும் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் அணியின் கேப்டன் ரஸ்ஸி வேண்டர் டுசென் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வியான் முல்டர், பெஹ்லுக்வாயோ, ஃபோர்டூன், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் போராடிவந்த ரீஸா ஹென்றிக்ஸும் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை