வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

Advertisement

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பொறுபுடன் விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் அரைசதத்தை நெருங்கிய டோனி டி ஸோர்ஸி 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களிலும், டேவிட் பெட்டிங்ஹாம் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கைல் வெர்ரைன் - வியான் முல்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கைல் வெர்ரைன் அரைசதம் கடந்தார். பின்னர் வியான் முல்டர் 34 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க,  அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேசவ் மஹாராஜும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த கைல் வெர்ரைனும் 59 ரன்களுக்கும், காகிசோ ரபாடா 6 ரன்களுக்கும், நந்தரே பர்கர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. விண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணியானது மீண்டும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்படி, மைக்கேல் லூயிஸ் 4 ரன்களிலும், கேப்டன் பிராத்வைட் 25 ரன்களிலும், கேசி கார்டி 17 ரன்களிலும், அலிக் அதானாஸ் 15 ரன்களிலும், கவேம் ஹாட்ஜ் 29 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் ரன்கள் ஏதுமின்றியும், ஜோஷுவா டா சில்வா 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் இணைந்த குடகேஷ் மோட்டி மற்றும் ஜொமல் வாரிக்கன் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குடகேஷ் மோட்டி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஷமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 222 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர், 

Advertisement

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியானது 46 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநயாகன் விருதை வியான் முல்டரும், தொடர் நாயகன் விருதை கேசவ் மஹாராஜும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News