WI vs SA, 2nd Test: ஜெய்டன் சீல்ஸ் அபார பந்துவீச்சு; விண்டீஸுக்கு 262 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Aug 17 2024 21:05 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பொறுபுடன் விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் அரைசதத்தை நெருங்கிய டோனி டி ஸோர்ஸி 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களிலும், டேவிட் பெட்டிங்ஹாம் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கைல் வெர்ரைன் - வியான் முல்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கைல் வெர்ரைன் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில் கைல் வெர்ரைன் 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் வியான் முல்டர் மேற்கொண்டு ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேசவ் மஹாராஜும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த கைல் வெர்ரைனும் 59 ரன்களுக்கும், காகிசோ ரபாடா 6 ரன்களுக்கும், நந்தரே பர்கர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. விண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை