பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வாலை நடத்திய விதம் வருத்தமளிக்கிறது - கிறிஸ் கெயில்!

Updated: Fri, Dec 23 2022 10:02 IST
Will Be Very Disappointed If Mayank Agarwal Is Not Picked As He's An Explosive Player,Says Chris Gay (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் அணிகளுக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தப்பட்டியலில் கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட மயங்க அகர்வால் பெயரும் இடம் பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது குறித்து அந்த அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்தில் மயங்க் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார். அவ்வாறு அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன். ஏனென்றால் அவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர். அவர் பஞ்சாப் அணிக்காக செய்த தியாகத்திற்கு பின்னும் அந்த அணியால் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் மற்ற அணிகள் அதிக தொகைக்கு அவரை வாங்குவார்கள் என நினைக்கிறேன். அவர் ஒரு அற்புதமான வீரர்.

பஞ்சாப் அணியினர் வீரர்களை அடிக்கடி மாற்றுகிறார்கள். இது அபத்தமானது. நீங்கள் அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டு வந்தால் உங்களால் ஒரு நிரந்தர ஆடும் லெவனை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள். சில சமயங்களில் அவர்கள் ஒரே அணியுடன் செல்வார்கள், ஆனால் பெரும்பாலும் வீரர்கள் வசதியாக இருப்பதில்லை.

வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்போது அவர்கள் அழுத்தமாக உணர்வார்கள். ஐபிஎல் ஏற்கனவே மிகவும் அழுத்தமானது, நீங்கள் அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்தால் அவர்கள் சிறப்பாக ஆடுவதை நீங்கள் பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை