சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைத்தது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - டேரில் மிட்செல்!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேலை 14 கோடி என்ற தொகைக்கு நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் நியூசிலாந்துக்காக சதமடித்து வெற்றிக்கு போராடினார்.
குறிப்பாக ஷமி போன்ற தரமான பவுலர்களை கொண்ட இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் சதமடித்து அசத்திய காரணத்தால் அவரை சென்னை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக 4ஆவது இடத்தில் அதிரடியாக விளையாடுவதற்காக அவரை சென்னை வாங்கியுள்ளது.
இந்நிலையில் தம்முடைய மகளின் பிறந்த நாளில் நடைபெற்ற ஏலத்தில் சென்னை நிர்வாகம் தம்மை பெரிய தொகைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கவில்லை என டேரில் மிட்சேல் தெரிவித்துள்ளார். அத்துடன் 14 கோடி என்பது தற்போதுள்ள கடினமான சூழ்நிலைகளிலிருந்து பல வகைகளிலும் தம்முடைய குடும்பத்தை காப்பாற்ற உதவும் என்று தெரிவிக்கும் அவர் தோனி தலைமையில் விளையாடி நிறையவற்றை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தோனி போன்ற மகத்தான கேப்டன் தலைமையில் விளையாடி நிறையவற்றை கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். என்னை வாங்குவதற்காக அவர்கள் கையை உயர்த்திய போது இதயம் படபடத்தது. கடந்த சீசனில் நான் விலை போகவில்லை. அந்த சூழ்நிலையில் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடைய இளைய மகளின் பிறந்த நாளை முடித்து விட்டு நாங்கள் ஏலத்தை பார்த்தோம். அன்றைய நாளில் எங்களுக்கு நிறைய வேலைகள் இருந்த போதிலும் என்னுடைய பெயர் வந்ததும் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க தொலைக்காட்சி முன் ஒட்டிக் கொண்டேன். இறுதியில் சென்னை என்னை வாங்கியதும் அணியின் மேலாளர் மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தொலைபேசியில் அழைத்து சிஎஸ்கே அணியில் நீங்கள் அங்கமாக வந்துள்ளீர்கள் என்பதை சொன்னார்கள்.
அந்த வகையில் அதிர்ஷ்டமாக இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை இப்போதும் என்னுடைய தலையை கிள்ளிப் பார்க்கிறேன். தற்போது என்னுடைய வாழ்வில் இருக்கும் சில சூழ்நிலைகளில் இது என்னுடைய குடும்பத்தை பல வழிகளிலும் முன்னேற்றுவதற்கு உதவும். குறிப்பாக என்னுடைய 2 மகள்கள் வளர்ந்து வரும் போது அவர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய விஷயங்களை என்னால் செய்ய முடியும். அவர்கள் தான் நான் விளையாடுவதற்கு அனைத்து காரணமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.