டி20 பிளாஸ்ட்: 6,6,6,6,6,1..அரங்கத்தை மிரளவைத்த வில் ஜேக்ஸ்!

Updated: Fri, Jun 23 2023 12:16 IST
Will Jacks smacks five maximums in a row off Middlesex's Luke Hollman! (Image Source: Google)

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் மிகவும் வெற்றிகரமான டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு முன்னோடியான தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வரும் டி20 பிளாஸ்ட் தொடர்தான். ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கிலாந்தின் டி20 ப்ளாஸ்ட் தொடர் 2003 முதல் 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொள்கின்றன. இதிலிருந்து அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியில் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தற்பொழுது நடந்து வரும் இந்த டி20 ப்ளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக இங்கிலாந்தின் இளம் அதிரடி வீரர் வில் ஜாக்ஸ் விளையாடுகிறார்.

இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 3.2 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் காயம் ஏற்பட்ட காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவருக்குப் பதிலாக நியூசிலாந்து ஆல் ரவுண்டர் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்று மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வில் ஜாக்ஸ் ருத்ரதாண்டவமாடியுள்ளார். ஆட்டத்தில் வீசப்பட்ட 11ஆவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி, ஆறாவது பந்தில் ஒரு ரன் எடுத்து அடித்து நொறுக்கி இருக்கிறார். அந்த ஓவரில் மொத்தம் 31 ரன்கள் வந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் வில் ஜாக்ஸ் 45 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 96 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது அதிரடியின் காரணமாக சர்ரே அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன் சேர்த்து. இதையடுத்து களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி 19.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனைப் படைத்தது. 

இந்நிலையில் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது அதிரடி ஆட்டத்தைப் பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளத்தில், இவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது குறித்து தங்களது வருத்தத்தையும் ஏக்கத்தையும் பதிவு செய்து புலம்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை