ENG vs IND: காயம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்கையில் முழங்காலில் காயம் அடைந்த ரோகித் சர்மா போட்டியின் கடைசி நாளில் பீல்டிங் செய்ய வரவில்லை. மேலும் ரோஹித்தின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் கடைசி நாளில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்வார் என்றும் பிசிசிஐ அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
அவர் தவிர புஜாராவும் தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நாள் போட்டியில் பீல்டிங் செய்யவில்லை. இந்த இருவரது காயம் காரணமாக இவர்கள் இருவரும் அடுத்த 5ஆவது போட்டியில் விளையாடுவார்களா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் செப்டம்பர் 10ஆம் தேதி இறுதி டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.
புஜாரா பீல்டிங் செய்ய வரவில்லை என்றாலும் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் அவரால் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட முடியும் என்று தகவல் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா அடுத்த போட்டியில் விளையாட முடியுமா ? என்பது சந்தேகமாகியுள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து தற்போது பேசிய ரோகித் சர்மா ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “என்னுடைய இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தற்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். அணியின் பிசியோ என்னை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். தற்போது நான் நலமுடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 127 ரன்கள் குவித்து இந்திய அணியின் பெரிய ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ரோகித் சர்மா நிச்சயம் 5ஆவது போட்டியில் முக்கிய வீரராக பார்க்கப்படுவதால் அவர் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.