டி20 உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசிய விராட் கோலி விரைவில் 100 சதங்களை எட்டி சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்றும் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக மாறுவார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை இரண்டு ஆண்டிற்கும் மேலாக சதம் அடிக்க முடியாமல் விராட் கோலி திணறி வருகிறார்.
அதோடு மட்டுமின்றி நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த விராத் கோலிக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதோடு தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி திறம்பட செயல்படவில்லை என்றால் அவருக்கு டி20 உலக கோப்பையின் இடமும் கேள்விக்குறியாகும் என்று பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்ட விராத் கோலி தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். அதன்படி ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். அதோடு இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
அதுமட்டும் இன்றி பாகிஸ்தான் அணி நிர்ணயத்தை 148 ரன்கள் துரத்தும் போது 35 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு தனது பங்களிப்பை வழங்கி இருந்தார். இருப்பினும் அவர் அடித்த அந்த 35 ரன்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் விராட் கோலியின் ஆட்டம் முன்பு போல் இல்லை எனவும் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது விராட் கோலி தனது பேட்டிங்கை சீர் செய்ய ஏதாவது ஒரு வகையான போட்டியிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக தற்போது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்திற்கு பல்வேறு வீரர்கள் தயாராகி வருவதால் அவர் விரைவில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அவரது தலைமையில் இந்திய அணி கோப்பையை தவறவிட்டதால் தற்போது கேப்டன் பதவியில் இருந்து கீழே இறங்கி சாதாரண வீரராக விளையாடி வரும் விராட் கோலி விரைவில் டி20 உலக கோப்பை தொடருக்கு அடுத்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் விராட் கோலியை வைத்திருக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதால் அவரே இந்த டி20 வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி தற்போது உள்ள இந்திய அணியில் வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருவதால் அவரின் இடத்திற்கு திறமையான வீரர்களை தேர்வு செய்யவும் அதிக வாய்ப்புள்ளதால் விராட் கோலி கட்டாயம் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு அந்த வடிவத்தில் இருந்து மட்டும் ஓய்வினை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.